திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
1. கோயில் |
பண் - பஞ்சமம் |
1
ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே. |
1 |
2
இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்
தூயநற் சோதியுள் சோதீ!
அடல்விடைப் பாகா! அம்பலக் கூத்தா!
அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே. |
2 |
3
தற்பொருள் பொருளே! சசிகண்ட! சிகண்டா!
சாமகண்டா! அண்ட வாணா!
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்
தந்தபொன் அம்பலத்து ஆடி!
கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்
தொண்டனேன் கருதுமா கருதே. |
3 |
4
பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்
பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே!
கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்
மகள்உமை யவள்களை கண்ணே!
அருமையின் மறைநான் கோலமிட் டாற்றும்
அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்
தொண்டனேன் உரைக்குமாறு உரையே. |
4 |
5
கோலமே மேலை வானவர் கோவே!
குணங்குறி இறந்ததோர் குணமே!
காலமே கங்கை நாயகா எங்கள்
காலகா லா! காம நாசா!
ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்
கோயில்கொண்டு ஆடவல் லானே!
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே. |
5 |
6
நீறணி பவளக் குன்றமே! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே!
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா!
ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத்
தொண்டனேன் இசையுமாறு இசையே. |
6 |
7
தனதன்நல் தோழா சங்கரா! சூல
பாணியே! தாணுவே சிவனே!
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே!
அனகனே குமர விநாயக சனக
அம்பலத்து அமரசே கரனே!
உன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. |
7 |
8
திறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கே
திகைக்கின்றேன் தனத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
நிகழ்வித்த நிகரிலா மணியே!
அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்
ஆலின்கீழ் இருந்தஅம் பலவா!
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
தொண்டனேன் புணருமா புணரே. |
8 |
9
தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்
நெறித்தரு ளியவுருத் திரனே!
அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட
ஆடம்பொன் னம்பலத்து ஆடும்
சொக்கனே! எவர்க்கும் தொடர்வரி யாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே. |
9 |
10
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
அருள்புரி வள்ளலே! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்
ஏறிய ஏறுசே வகனே!
அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்
அடர்த்தபொன் னம்பலத் தரசே!
விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே! உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே. |
10 |
11
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை
மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே! உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே. |
11 |
திருச்சிற்றம்பலம் |
திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
2. கோயில் |
பண் - பஞ்சமம் |
12
உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூ மப்பட லத்தின்
பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்தசிற் றம்பலக் கூத்தா!
மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள்என் மனத்துவைத் தருளே. |
1 |
13
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால்
எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்
திரண்டசிற் றம்பலக் கூத்தா!
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
உன்னடிக் கீழ(து)என் னுயிரே. |
2 |
14
வரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம்
கரும்பொடு மாந்துமே திகள்சேர்
பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்
பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்
இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே. |
3 |
15
தேர்மலி விழவில் குழவொலி தெருவில்
கூத்தொலி ஏத்தொலி ஒத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில்
திழந்தசிற் றம்பலக் கூத்தா!
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே. |
4 |
16
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு)
இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதனம்
முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
செம்பொற் சிற்றம்பலக் கூத்த!
பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக்
கச்சுநூல் புகுந்ததென் புகலே. |
5 |
17
அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று)
அழைப்பொழிந்(து) அருமறை அறிந்து
பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப்
பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
செல்வச் சிற்றம்பலக் கூத்த!
மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி
வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே. |
6 |
18
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு(வு) உதரத் தார்திசை மிடைப்ப
நடஞ்செய்சிற் றம்பலக் கூத்த!
உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து
கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே. |
7 |
19
கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்
கங்கணம் செங்கைமற் றபயம்
பிணிகெட இவைகண்(டு) அரன்பெரு நடத்திற்
பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே!
சீர்கொள்சிற் றம்பலக் கூத்த!
அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய
சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே. |
8 |
20
திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலின் நெருக்கிப்
பெருமுடி மோதி உருமணி முன்றில்
பிறங்கிய பெரும்பற்றுப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லன்முப் புரம்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்த!
கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல
மலர்முகம் கலந்த(து)என் கருத்தே. |
9 |
21
ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம்
பெருந்தடங் கண்கள்மூன் றுடையான்
பேர்கள்ஆ யிரம்நூராயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றுப் புலியூர்ச்
சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று
சென்னிச் சிற்றம்பலக் கூத்த!
நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. |
10 |
22
காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சென்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன் பெரும்பற்றிப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட
செல்வச்சிற் றம்பலக் கூத்த!
பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே. |
11 |
திருச்சிற்றம்பலம் |
திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
3. கோயில் |
பண் - பஞ்சமம் |
23
உறவா கியயொ கமும்போ கமுமாய்
உயிரொளி என்னும்என் பொன்னொருநாள்
கிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என்னும் மணிநீர் அருவி
மகேந்திர மாமலைமேல் உறையும்
குறவா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
1 |
24
காடாடு பல்கணம் குழக் கேழற்
கடும்பின் நெடும்பகற் கான்நடந்த
வேடா! மகேந்திர வெற்பா! என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என்னும் செல்வர்மூ வாயிரம்
செழுஞ்சொதி அந்தணர் செங்கைதொழும்
கோடா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
2 |
25
கானே வருமுரண் எனம் எய்த
களியார் புளினநற்கா ளாய்என்னும்
வானே தடவும் நெடுங் குடுமி
மகேந்திர மாமலை மேலிருந்த
தேனே என்னும் தெய்வவாய் மொழியார்
திருவாளர்மூ வாயிரவர் தெய்வக்
கோனே என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
3 |
26
வெளியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள்
விசயற்(கு) அருள்செய்த வேந்தே! என்னும்
மறியேறு சாரல் மகேந் திரமா
மலைமேல் இருந்தமரும் தே! என்னும்
நெறியே! என்னும் நெறிநின்ற வர்கள்
நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்
குறியே! என்னும் குணக்குன்றே! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
4 |
27
செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்
திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்று என்மேல் பகையாட வாடும்
எனைநீ நலிவதென் னேஎன்னும்
அழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு)
அரசுக் கரசே! அமரர்தனிக்
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
5 |
28
வண்டார் குழலுமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவல வில்லாடி வேடர்
கடிநா யுடன்கை வளைந்தாய்! என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலைபல் பசுங்கண்
கொண்டாய் என்னும் குணக்குன்றே! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
6 |
29
கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்
கணையும் கவணும் கைக்கொண்(டு)
உடுப்பாய் தோல்செருப்புச் சுரிகை
வராக முன்னோடி விளியுளைப்ப
நடப்பாய்! மகேந்திர நாத! நா தாந்தத்(து)
அரையா என்பார்க்கு நாதாந்தபதம்
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
7 |
30
சேவேந்து வெல்கொடி யானே! என்னும்
சிவனே! என் சேமத்துணையே என்னும்
மாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்
வளர்நா யகா! இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே! என்னும் குணக்குன்றே! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
8 |
31
தரவார் புனம்சுனை தாழ்அருவித்
தடம்கல் லுறையும் மடங்கல் அமர்
மரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்
மழைசூழ் மகேந்திர மாமலைமேல்
கரவா! என்னும் சுடல்நீள் முடிமால்அயன்
இந்திரன் முதல்தே வர்க்கெல்லாம்
குரவா என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
9 |
32
திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்
பெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீர் அருவி மகேந்திரப்பொன்
மலையின் மலைமக ளுக்கருளும்
குருநீ என்னும் குணக்குன்றே! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
10 |
33
உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று)
உணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப்
பிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்
குற்றாய்! என்னும் குணக்குன்றே! என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
11 |
34
வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து)
அவனிச் சிவலோக வேதவென்றி
மாறாத மூவாயிர வரையும் எனையும்
மகிழ்ந்தாள வல்லாய்! என்னும்
ஆறார் சிகர மகேந்திரத்(து) உன்
அடியார் பிழைபொறுப்பாய் மாதோர்
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. |
12 |
திருச்சிற்றம்பலம் |
திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
4. கோயில் |
பண் - காந்தாரம் |
35
இணங்கிலா ஈசன் நேசத்(து) இருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணஅடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
1 |
36
எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங்(கு) அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
2 |
37
அருள்திரள் செம்பொன் சோதி அம்பலத் தாடுகின்ற
இருள்திரள் கண்டத் தெம்மான் இன்பருக்(கு) அன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
3 |
38
துணுக்கென அயனும் மாலும் தொடர்வரும் சுடராய் இப்பால்
அணுக்கருக்(கு) அணிய செம்பொன் அம்பலத் தாடிக்(கு) அல்லாச்
சிணுக்கரைச் செத்தற் கொத்தைச் சிதம்பரைத் சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப்பேய்க ளோடே. |
4 |
39
திசைக்குமிக் குலவு சீர்த்தித் தில்லைக் கூத்(து) உகந்து தீய
நசிக்கவெண் ணீற(து) ஆடும் நமர்களை நணுகா நாய்கள்
அசிக்கஆ ரியங்கள் ஓதும் ஆதரைப் பேத வாதப்
பிசக்கரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
5 |
40
ஆடர(வு) ஆட ஆடும் அம்பலத்(து) அமிர்தே என்னும்
சேடர்சே வடிகள் சூடத் திருவிலா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே. |
6 |
41
உருக்கிஎன் உள்ளத் துள்ளே ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப்(பு) அருளும் தில்லைச் செல்வன்பாற் செல்லும் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய் பேசா(து)அப் பேய்க ளோடே. |
7 |
42
செக்கர்ஒத்(து) இரவி நூறா யிரத்திரள் ஒப்பாம் தில்லைச்
சொக்கர்அம் பலவர் என்னும் கருதியைக் கருத மாட்டா
எக்கரைக் குண்ட மிண்ட எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்வாய் பேசாது அப் பேய்க ளோடே. |
8 |
43
எச்சனைத் தலையாக் கொண்டு செண்டடித்(து) இடபம் ஏறி
அச்சங்கொண்(டு) அமரர் ஓட நின்றஅம் பலவற்(கு) அல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக் கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
9 |
44
விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளிர் மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற அரசனுக்(கு) ஆசை உள்ளத்து
தெண்ணரைத் தெருளா உள்ளத்(து) இருளரைத் திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
10 |
45
சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற்(கு) ஆளாம்
உறைப்புடை யடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீ(று) ஆடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய் பேசா(து) அப் பேய்க ளோடே. |
11 |
திருச்சிற்றம்பலம் |